வாஸ்து மீனால் பலன் உண்டா...?
சிலர் விடுகளில் வாஸ்து மீன்கள் வளர்க்கிறார்கள் அந்த மீனை வளர்த்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்குமா?
மனிதன் நாகாரீகத்தின் படிக்கட்டுகளை தொட்ட நாட்களிலிருந்து வளர்ப்பு பிராணிகளை வளர்க்க துவங்கி விட்டான். மாடுகள் மனிதனின் பயிர் தொழிலுக்கு உதவி செய்தன. அத்தோடு அவனுக்கு தேவையான பால் நெய் முதலிய உணவு பொருள்களையும் கொடுத்தன. ஆடுகள் தங்களது ரோமங்களால் மனிதனது குளிரை போக்கியதோடு மட்டுமல்லாமல் அவன் உணவு தேவையையும் பூர்த்தி செய்தன. வேட்டை தொழிலுக்கும் காவல் காப்பதற்கும் நாய்கள் பயன்பட்டன. கோழிகள் வீட்டு தோட்டத்தை கிளறி மண்ணை நெகிழும் வண்ணம் செய்தன மண்ணுக்கு தேவையான உரத்தையும் தந்தன தேவையற்ற புழுபூச்சிகளை உண்டும் வாழ்ந்தன.
மனிதன் வளர்த்த பூனைகள் எலிகளை வேட்டையாடி தனது இல்லத்தில் வைத்த பயிர்களை அவைகள் நாசம் செய்யாமல் பாதுகாத்தன. விஷஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து தொல்லை கொடுக்காமலும் தடுத்தன. குதிரைகள் மனிதனின் விரைவான பயணத்திற்கு பயன்பட்டன. யானைகள் போர்தொழிலுக்கு மட்டுமல்ல வழிபாடு நடத்தவும் கதிர் மணிகளை போரடிக்கவும் உதவின. இதனால் மனிதன் விலங்குகளை ஐந்தறிவு படைத்த ஜீவன்களாக பார்க்காமல் தனது குழந்தைகளை போலவே பார்த்து பராமரித்து வந்தான்.
இப்படி மனிதனின் அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட விலங்குகள் தனது சூட்சம பலாபலன்களால் தன்னை வளர்க்கும் எஜமான்களுக்கு நல்ல பலனையும் கெட்ட பலனையும் கொடுத்தன. உதாரணமாக ஆடுகளை மேய்க்கும் தொழிலாளிகள் சில ஆடுகளின் உடம்பில் விசித்திரமான சுழிகள் இருந்தால் அவற்றை தனது மந்தையிலிருந்து விலக்கி விடுவார்கள். காரணம் சில ஆடுகளின் ராசிப்படி அவை எந்த மந்தையில் இருக்கிறதோ அந்த மந்தையை தொற்றுநோய்களால் பாதிப்படைய செய்து விடும். மேலும் வளர்ப்பவனின் வாழ்க்கை தரத்தையும் பாதிக்குமென்று சொல்கிறார்கள்.
வளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.
அந்த சாஸ்திரங்களில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான கருத்தொன்றை சொல்கிறார்கள் அதாவது ஒரு வீட்டுக்கு வரும் எதிர்பாராத துயரத்தை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் வாங்கி கொண்டு வளர்ப்பு விலங்குகள் மறித்து விடும் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. மேலும் மனிதனுக்கு ஏற்படும் கண்திருஷ்டி போன்ற தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்ப்பவனுக்கு தான் துன்பபட்டலும் அரணாக நிற்குமென்றும் சொல்லபடுகிறது.
அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும் அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் குறிப்பிட்ட ஜாதி மீனை வளர்த்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கிவிடும் என்பது வடிகட்டிய அசட்டு தனமே ஆகும். உதாரணமாக ஈசான்ய மூலை என்ற வடகிழக்கு பகுதியில் குளியலறை மற்றும் கழிவறை இருந்தால் அந்த வீடு முன்னேறாது அதற்கு கண்டிப்பாக அந்த பகுதிகளை மாற்றி அமைத்தே ஆக வேண்டுமே தவிர வாஸ்து மீன்கள் போன்ற வாஸ்து சக்தியை பயன்படுத்தினால் வீட்டில் உள்ள குறைபாடுகள் நீங்கிவிடும் என்பது எந்த ஆதாரமும் இல்லாத கருத்தாகும். காரணம் வாஸ்து மீன் என்று அழைக்கப்படும் மீன்களாக இருக்கட்டும் சாதாரண வகை மீன்களாக இருக்கட்டும் எல்லாமே ஒரே மாதிரியான ஈர்ப்பு சக்தியை கொண்டது தான்.
வாஸ்து மீன் என்பது மக்களின் வாஸ்து நம்பிக்கையை தவறுதலாக பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு மோசடி வியாபாரமாகும். அந்த மீனுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுப்பது அறிவுள்ள செயலாக இல்லை எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன் தீர ஆலோசனை செய்து செயல்படுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.